பல்லடம் அருகே இளைஞரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 6 பேர் கைது: 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 
palladam

பல்லடத்தில் இளைஞரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 6 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்(23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில் சசிகுமார், தனது நண்பரான முருகேசன் என்பவருடன் பல்லடம் அருகே  ஹைடெக் பார்க் பின்புற பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 இளைஞர்கள் இருவரையும் வழிமறித்து, சசிகுமாரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். மேலும், அவர்கள் தள்ளிவிட்டதில் முருகேசன் காயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து சசிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

palladam

இந்த நிலையில் நேற்று பல்லடம் பொள்ளாச்சி - உடுமலை  சாலை சநதிப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பல்லடம் போலீசார், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 6 இளைஞர்களை மறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் சசிகுமாரை மிரட்டி செல்போன் பறித்து கும்பல் என தெரியவந்தது. இதனை அடுத்து, வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடியை சேர்ந்த காசிராமன், பிச்சமுத்து, இசக்கிபாண்டி, மணிகண்டன், சுரேஷ் மற்றும் பல்லடம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.