கோவை விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் - 4 பேர் கைது!

 
gold

சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.6.5 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இது தொடர்பாக 4 பேரை கைது செய்னர்.

கோவை விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் சார்ஜா நகரில் இருந்து வரும் விமானத்தில் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், திங்கட்கிழமை அதிகாலை ஷார்ஜாவில் இருந்து வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த 18 பயணிகளின் உடமைகளை சந்தேகத்தின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள்  தீவிர சோதனை மேற்கொண்டனர். 

covai airport

அப்போது, சென்னையை சேர்ந்த சுரேஷ்குமார், கடலுரை சேர்ந்த சங்கர், பரமக்குடியை சேர்ந்த ராம்பிரபு மற்றும் சேலத்தை சேர்ந்த குமாரவேல் ஆகிய 4 பேர் ஆடைகள் மற்றும் மலக்குடலில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ரூ.6.5 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக 4 பேரையும் கைதுசெய்து, தங்க கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் பல கோடி மதிப்பிலான தங்கம் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது