"ஈரோடு ரயில் நிலையத்தில் 5-வது நடைமேடை புதிதாக அமைக்க வேண்டும்"... தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம், காங்கிரஸ் கட்சியினர் மனு!

 
southern railway

ஈரோட்டிலிருந்து சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயிலின் நேரத்தை மாற்றி அமைக்கவும், ஈரோட்டில் 5-வது நடைமேடை புதிதாக அமைக்கவும் வலியுறுத்தி, தென்னக ரயில்வே பொதுமேலாளரிடம், காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

ஈரோடு ரயில் நிலையத்தை ஆய்வுசெய்வதற்காக தென்னக ரயில்வே பொதுமேலாளர் மால்யா இன்று ஈரோட்டுக்கு வந்திருந்தார். அப்போது, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவரும், முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான கே.என். பாஷா தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் விகே செந்தில் ராஜா, ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்சத் ஆகியோர் முன்னிலையில், காங்கிரஸ் கட்சியினர் பொது மேலாளர் மால்யாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

erode

அந்த மனுவில், ஈரோட்டிலிருந்து சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயிலின் நேரத்தை மாற்றி அமைக்கவும், ஈரோடு ரயில் நிலையத்தில் 5-வது நடைமேடை புதிதாக அமைக்கவும் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், வயது முதிர்ந்த சீனியர் சிட்டிசன்களுக்கு பழைய முறையான ரயிலில் பயண சலுகை வழங்கிடவும், ஈரோட்டிலிருந்து சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் ஆம்பூர், வாணியம்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.மேலும், பேசஞ்சர் ரயிலில் செல்லும் பயணிகளிடம், விரைவு ரயில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்து, பேசஞ்சர் கட்டணமான பழைய முறைப்படி வசூலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர்கள் எம்ஆர் அரவிந்தராஜ், வழக்கறிஞர் பாஸ்கர்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் இரா.கனகராஜ், ஏ. அன்பழகன், ரயில்வே தொழிற்சங்கம் கொடுமுடி ஜெயராமன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.