வாழப்பாடி அருகே துணிகரம்... கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 58 பவுன் நகை, ரூ.2.32 லட்சம் பணம் கொள்ளை!

 
robbery

வாழப்பாடி அருகே கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 பவுன் நகை, ரூ.2.32 லட்சம் பணம் மற்றும் சொகுசு காரை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சேத்துக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (45). இவர் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு ஸ்ரீமதி, பவ்யா என 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சத்யா கோரோனா பாதிப்பால் இறந்துவிட்டார். மேலும் மகள்கள் இருவரும் வெளியூரில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் ஜெயபிரகாஷ் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வீட்டின் அருகில் அவரது தாய் சித்ராவும் வசித்து வருகிறார். 

vazhapadi

நேற்று தொழில் தொடர்பாக வெளியூருக்கு சென்றிருந்த ஜெயபிரகாஷ் இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் உட்புறமாக பூட்டிக்கொண்டு தூங்கியுள்ளார். இன்று அதிகாலை சித்ரா, ஜெயப்பிரகாஷின் வீட்டிற்கு சென்றபோது, வீடு திறந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும், வீட்டில் நின்ற சொகுசு காரும் மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா, ஜெயபிரகாஷை எழுப்பி பார்த்தபோது, மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோக்களை உடைத்து, உள்ளே வைத்திருந்த 58 பவுன் தங்க நகைகள், ரூ.2.32 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த ஜெயப்பிரகாஷ், வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.