வேலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 12 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி... அதிமுக பிரமுகர் கைது!

 
arrest

வேலூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண் உள்ளிட்ட 12 பேரிடம் ரூ.57 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலிசார் கைது செய்தனர்.

வேலூர் காகிதப்பட்டறை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (36). இவர் அதிமுக ஜெயலலிதா பேரவையில் இணை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் ரங்காபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சக்திவேலன் என்பவரது மனைவி ரேவதியிடம், கடந்த அதிமுக ஆட்சியின்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ‌.8.25 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால் உறுதி அளித்தபடி சுகுமார் வேலை வாங்கித் தரவில்லை.

police

இதனால் ரேவதி பணத்தை திருப்பி கேட்டபோது, அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ரேவதி, இது குறித்து வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பூபதி ராஜன், காவல் ஆய்வாளர் கவிதா ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அதிமுக பிரமுகர் சுகுமார், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கவிதா உள்ளிட்ட 12 பேரிடம் ரூ.57 லட்சம் ரூபாய் பணம் பெற்று கொண்டு, வேலை வாங்கி தராமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் சுகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.