ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை!

 
robbery

தருமபுரி அருகே ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வீட்டின் கதவை உடைத்து 51 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள வெலகலஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (66). முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர். இவர் கடந்த 6ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில், மறுநாள் காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து பன்னீர் செல்வத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  இதனை அடுத்து, பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விரைந்து வீட்டிற்கு வந்து பார்த்தனர்.

police

அப்போது, மர்மநபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 51 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.