தலைமை ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை!

 
robbery

திண்டுக்கல் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ்வரி(52). இவர் தேவரப்பன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பரமேஸ்வரி கடந்த சில நாட்களுக்கு முன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வெளியூரில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அய்யம்பாளையத்திற்கு திரும்பி உள்ளனர். அப்போது, அவர்களது வீட்டின்  கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது.

police

இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான பரமேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மர்மநபர்கள் அவர்களது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து பரமேஸ்வரி பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமை ஆசிரியை வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.