கோவையில் வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் தங்க செயின் பறிப்பு... சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை!

 
cbe

கோவை சிங்காநல்லூர் திருகுமரன் நகரை சேர்ந்தவர் செல்வி (50). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர், தனது 2 மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் வேலைக்கு செல்வதற்காக செல்வி வீட்டின் கதவை திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது, வீட்டின் வெளியே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நின்றுள்ளார். சந்தேகமடைந்த செல்வி, அவரிடம் எதற்காக இங்கு நிற்கிறீர்கள்? என விசாரித்துள்ளார்.

police

அப்போது, அந்த நபர் வீட்டின் உரிமையாளர் வீட்டை பார்க்க சொல்லியதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த செல்வி கதவை சாத்த முயன்றுள்ளார். அப்போது, திடீரென அந்த இளைஞர் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். பின்னர் சாலையில் காத்திருந்த மற்றொரு இளைஞடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த  செல்வி, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை  ஆய்வுசெய்தனர். அப்போது, செல்வியின் நகையை பறித்துக்கொண்டு ஒடிவரும் திருடன், இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து, சிசிடிவி காட்சி அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.