ஈரோடு கருங்கல்பாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது!

 
arrest

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த சனிக்கிழமை அன்று ஈரோடு கருங்கல்பாளையம் நெரிக்கல்மேடு பகுதியில் சிலர், சாலையில் சென்ற பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன் பேரில், கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் ராஜ பிரபு தலைமையான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, 5 பேர் கும்பல் சாலையில் நின்றுகொண்டு பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து,  அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

karungalpalayam

அதில் அவர்கள், கருங்கல்பாளையம் சிந்தன் நகரை சேர்ந்த வேல்முருகன் (28), ராஜகோபால் தோட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன் (30), குட்டி என்கிற செந்தில் நாகராஜன் (36), காவேரி ரோட்டை சேர்ந்த மணிகண்டன்(26) மற்றும் சொக்காய் தோட்டத்தை சேர்ந்த ரகு (24) என்பது தெரிய வந்தது. மேலும், வேல்முருகன், பாண்டியராஜன்,  செந்தில் நாகராஜன் ஆகியோர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.