திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற பெண் உள்ளிட்ட 5 பேர் கைது; 2 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 
dgl

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனுமந்தராயன் கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தென் மண்டல ஐஜி தனிப்படை போலீசார், அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, புதுப்பட்டி - பொண்ணுமாந்துறை கழுதை ரோடு வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

arrest

அதில் அவர்கள் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிவேல்(22), சக்திவேல்(20) மற்றும் பேகம்பூரை சேர்ந்த சுல்தான் அலாவுதீன்(21) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், 3 பேரையும் கைது செய்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் தாலுகா போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அனுமந்தராயன் கோட்டை பகுதியை சேர்ந்த பீட்டர்(38) மற்றும் ரோஸி(46) ஆகியோரிடம் இருந்து விற்பனைக்காக கஞ்சா வாங்கியது தெரிய வந்தது. 

தொடர்ந்து, போலீசார் பீட்டர், ரோஸி ஆகியோரையும் கைது செய்தனர். தொடர்ந்து,  5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி தீவிரமாக வருகின்றனர்.