சேலம் வழியாக ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் - ரயில்வே போலீசார் நடவடிக்கை!

 
cannabis

சேலம் வழியாக கேரளாவுக்கு சென்ற ஆலப்புழா விரைவு ரயிலில் கடத்திச்சென்ற 5 கிலோ கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்களில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதனால் கடத்தல் சம்பவங்களை தடுக்க ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆலப்புழா விரைவு ரயில் சேலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயிலில், ரயில்வே காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமையிலான போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில்  கேட்பாரற்று கிடந்த பையை ரயில்வே போலீசார் சோதனையிட்டனர்.

salem

அப்போது, அதில் 3 பண்டல்களில் சுமார் 5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், அதே பெட்டியில் மற்றொரு பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து, கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அவற்றை சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சாவை கடத்திவந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.