தருமபுரி அருகே பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழப்பு - போலீசார் விசாரணை!

 
infant

தருமபுரி அருகே தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தின்ன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவிகுமார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி யோகபிரியா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த யோகபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

dharmapuri

அங்கு கடந்த 4ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய யோகப்பிரியா நேற்று முன்தினம் காலை குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். அப்போது, திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, குடும்பத்தினர் குழந்தையை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து 5 நாட்களே ஆன குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தின்னஅள்ளி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.