பெரம்பலூர் அருகே மான்களை வேட்டையாடிய 5 பேர் கைது... 2 நாட்டுத்துப்பாக்கிகள், கார் பறிமுதல்!

 
dd

பெரம்பலூர் அருகே நாட்டுத்துப்பாக்கியால் 3 மான்களை வேட்டையாடிய சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.  

பெரம்பலூர் குற்றப்பிரிவு தனிப்படை உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இன்று காலை ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். புதுநடுவலூர் ஊராட்சிக்குப்பட்ட வெள்ளனூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த காரை போலீசார் சந்தேகத்தன் பேரில் சோதனையிட்டனர். அப்போது, அந்த காரில் நாட்டு துப்பாக்கியால் 3 மான்களை சுட்டுக்கொன்று எடுத்துச்செல்வது தெரியவந்தது. இது தொடர்பாக காரில் இருந்த 5 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் வெள்ளனூரை சேர்ந்த சோலைமுத்து மகன் மணிகண்டன் (24), கணேசன் மகன் கோவிந்தன்(33), பெருமாள் மகன் கார்த்திக் (19), மற்றும் 17 வயது சிறுவன்,  ரெங்கநாதபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராமச்சந்திரன் (30)  ஆகியோர் என்பது தெரியவந்தது.

deer

மேலும், அவர்கள் திருச்சி மாவட்டம் எதுமலை வனப்பகுதியில் மான்களை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து பெரம்பலூர் போலீசார் அவர்கள் மீது வழக்குபதிவு செய்து சிறுவன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுதுப்பாக்கிகள், வேட்டையாடிய 3 மான்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, பெரம்பலூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.