திருச்சியில் உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் 481 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்!

 
trichy

திருச்சியில் பேக்கரி மற்றும் டீக்கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 481 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்துவதாக,  உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ் பாபு தலைமையிலான குழுவினர் செவ்வாய்கிழமை இரவு கே.கே.நகர் பகுதியில் பிரபல பேக்கரி மற்றும் தேநீர் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது 2 இடங்களிலும் சுமார் 6 கிலோ கலப்பட டீ தூள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

trichy

இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், கே.கே.நகர் சீதாதேவி கோயில் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பரிடம் 75 கிலோ கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறையினர், தொடர்ந்து,  புஷ்பராஜின் சகோதரர்கள் பொன்னகர் கருணாகரன் என்பவரிடமிருந்து 240 கிலோ கலப்பட தேயிலைத்தூளையும்,  விஜயகுமார் என்பவரிடம் இருந்து சுமார் 160 கிலோ கலப்பட தேயிலை தூளையும் பறிமுதல் செய்தனர். மேலும், கலப்படத்திற்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் என 481 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக 4 பேரின் மீது வழக்கு தொடர்வது தொடர்பாக 8 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்வது தெரியவந்தால்,  உணவு பாதுகாப்புத்துறையை அணுக வேண்டும் என தெரிவித்தார்.