பொள்ளாச்சியில் ஆசிரியர் வீட்டில் 44 பவுன் நகை, ரூ.20 லட்சம் ரொக்கம் கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் 44 பவுன் நகை, ரூ.20 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவை ரோடு நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி சரவணகுமார், தனது மகளின்  பூப்பு நீராட்டு விழாவிற்காக குடும்பத்துடன் சொந்த ஊரான பழனிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

pollachi

மறுநாள் காலையில் அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு காவலர், செல்போன் மூலம் சரவணகுமாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த, சரவணகுமார் மற்றும் குடும்பத்தினர் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 44.5 பவுன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சரவணகுமாரின் மனைவி ஜெயசித்ரா, வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.