தருமபுரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 439 மனுக்கள் பெறப்பட்டன!

 
dd

தருமபுரி மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த 3 பேரின் வாரிசுதார்களுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணைகளை ஆட்சியர் சாந்தி வழங்கினார்.  

தருமபுரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் சாந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். இந்த முகாமில் சாலை வசதி, குடிநீர் வசதி, பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 439 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் சாந்தி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுத்திடுமாறு உத்தரவிட்டார்.

dd

இந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் கீழ்  சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலராக பணிபுரிந்து பணியிடையில் மரணமடைந்த வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணி நியமன ஆணைகளையும் ஆட்சியர் சாந்தி வழங்கினார். மேலும், வருவாய்த்துறை சார்பில்  போகரஅள்ளி குட்டம்பட்டியை சேர்ந்த முத்து என்பவருக்கு ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு ஆணையையும் ஆட்சியர் சாந்தி வழங்கினார்.

தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 8-வது மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில் பங்கேற்று, கவுஹாத்தியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பாரா நீச்சல் போட்டிக்கு தேர்வாகி உள்ள தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் வெங்கடேஷன், விஜயகுமார், அண்ணாமலை ஆகியோர், ஆட்சியர் சாந்தியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.