தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை!

 
robbery

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள நுங்கம்பாக்கம் லட்சுமி பிரியா நகரில் வசித்து வருபவர் தனியார் நிறுவன ஊழியர் மகேஷ்வரன். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதனிடையே, மகேஷ்வரன் தனது பிறந்தநாளையொட்டி, கடந்த வாரம் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு  சென்று தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை திருவள்ளூர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மகேஷ்வரனின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. 

thiruvallur

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூலம் தகவல் அளித்தனர். அதன் பேரில், மகேஷ்வரன் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தார். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் வைத்திருந்த 43 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கொள்ளை நடைபெற்ற இடத்தை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.