கம்பத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை!

 
cumbum

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 41 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் நேதாஜி நகரில் வசித்து வருபவர் ஜெயசந்திரன் (51). இவர் குள்ளப்பகவுண்டன் பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை உத்தமபுரத்தில் வசிக்கும் மாமனார் உயிரிழந்ததால், ஜெயசந்திரன் குடும்பத்துடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது.

cumbum

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 41 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, ஜெயச்சந்திரன் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன் பேரில், போலீசார், கொள்ளை நடைபெற்ற வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தடயவில் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் லக்கி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர்.  தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து. கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.