நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளிகடைகள் அடைப்பு...ரூ.100 கோடி வர்த்தகம் முடக்கம்!

 
erode

நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகளை அடைத்து, ஜவுளித்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜவுளி உற்பத்திக்கு பயன்படும் நூல் விலை கடந்த 1 மாதத்தில் 40ஆம் நம்பர் நூல் கிலோ 80 ரூபாய் வரையும், 30ஆம் நம்பர் நூல் 90 ரூபாய், 20ஆம் நம்பர் நூல் 50 ரூபாய், வெப்ட் 40ஆம் நம்பர் ஒரு பாக்கெட் 3,200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.  

இதனால், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் சங்கம்,  நூல் வியாபாரிகள் சங்கம், சிறு விசைத்தறி உரிமையாளர்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சங்கம்  உள்ளிட்ட 18 அமைப்புகள் சார்பில் இன்று, நாளையும் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

1

இதன்படி,  ஈரோடு மாநகர் பகுதியில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் நகர், என் எம்.எஸ்.கமவுண்ட், ராமசாமி கவுண்டர் வீதி, சொக்கநாதர் கவுண்டர் வீதி, பிரிந்தாசாரி வீதி, அகில் மேடு வீதி இந்திராநகர் உட்பட பகுதிகளில் 4 ஆயிரம், ஜவுளி கடைகள் மற்றும் குடோன்கள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று கடை அடைப்பு காரணமாக அந்த பகுதியில் உள்ள கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

நூல் விலை உயர்வை கண்டித்து நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஜவுளித்துறையினர் போராட்டம் காரணமாக ஈரோட்டில் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி வரை வணிகம் பாதிக்கப்படும் என ஜவுளி வியாரிகள் தெரிவித்துள்ளனர். ஜவுளி வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஈரோடு கனி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்