ஈரோட்டில் ஓய்வுபெற்ற தபால் ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை திருட்டு!

 
robbery

ஈரோட்டில் ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்ட்ர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (65). ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர். இவரது மனைவி சாந்தி. இவர்களது 3 மகள்களுக்கும் திருமணமான நிலையில் தமிழ்செல்வன் - சாந்தி மட்டும் தனியே வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று தம்பதியினர் இருவரும் திருச்சியில் உள்ள மகள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

police

இந்த நிலையில், நேற்று காலை தமிழ்செல்வனின் உறவினரான பிரபு என்பவர் திருமண பத்திரிக்கை வைப்பதற்காக, தமிழ்செல்வனின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த  பிரபு, இதுகுறித்து தமிழ்செல்வனுக்கு போனில் தகவல் அளித்தார். அதன் பேரில், தமிழ்செல்வன் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தார்.  

இதனை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் 15,000 ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து வருகின்றனர்.