ஓய்வுபெற்ற காப்பீட்டு நிறுவன அதிகாரி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை!

 
dindigul

திண்டுக்கல் அருகே ஓய்வுபெற்ற தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை(62). ஒய்வுபெற்ற தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவன அதிகாரி. இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், செல்லத்துரை கடந்த சில நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில், இன்று காலை செல்லத்துரையின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து செல்லத்துரைக்கு செல்போனில் தகவல் அளித்தனர். 

dindigul

அதன் பேரில், செல்லத்துரை சின்னாளப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மர்மநபர்கள் வீட்டில் இருந்த 3 பீரோக்களை உடைத்து அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.