கோவை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது... 6 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
coimbatore

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கல்லுரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கல்லூரி அருகே சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்றிருந்த 4 இளைஞர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவர்களிடம் இருந்த பையில் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 6 கிலோ அளவிலான கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்கள் 4 பேரையும் மதுக்கரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

arrest

விசாரணையில் அவர்கள் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த  காதர் பாட்ஷா(27), கணேசபுரத்தை சேர்ந்த ரவிகுமார்(26), மணிகண்டன் (24) மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அகிலேஷ் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் கல்லுரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.