பெரம்பலூர் அருகே கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

 
accident

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் முனியப்பன் (48). இவர் கருரில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், முனியப்பன், தனது தாய் பழனியம்மாள் (58), மனைவி கலைவாணி(40), பிள்ளைகள் ஹரிணி(13), கார்முகிலன்(5)  ஆகியோருடன் கருரில் இருந்து சீர்காழிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கசாவடி அருகே  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

perambalur gh

அப்போது, எதிர்பாராத விதமாக முனியப்பனின் கார் மீது பின்னால் வந்த லாரி ஒன்று அதிவேகமாக மோதியது. இதில் கார் முன்னால் நின்ற ஈச்சர் வாகனம் மீது மோதியது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி பைனான்சியர் முனியப்பன், அவரது தாய், மனைவி, மகள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவன் கார்முகிலன் பலத்த காயமடைந்தார்.

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்களமேடு போலிசார், 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும்,  இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.