சிங்கம்புணரியில் துணிகரம்... வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள், ரூ. 75 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எஸ்.வி.எஸ் நகரில் வசித்து வருபவர் பாஸ்கரன் மனைவி லதா(48). இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் காலை லதா வீட்டை பூட்டிவிட்டு, மணப்பட்டியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இதனை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 35 பவுன் தங்க நகைகள்,  ரூ.75 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மாலையில் லதா வீட்டிற்கு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

singampunari

இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான லதா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள், பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.