"நாமக்கல் மாவட்டத்தில் 3,448 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்" - ஆட்சியர் தகவல்!

 
namakkal

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு தொகுதி எம்எல்ஏ ஈஸ்வரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதில் ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் பேசியதாவது: - நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி.மீ., அக்டோபர் மாதம் முடிய இயல்பு மழை அளவு 557.28 மி.மீ. தற்போது வரை 887.66 மழை பெறப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 330.38 மி.மீ அதிகமாக பெறப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை வேளாண்மை பயிர்கள் 85,960 எக்டேரிலும், தோட்டக்கலை பயிர்களில்31,087 எக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யூரியா1642 மெ.டன், டிஏவி1,702 மெ.டன், முரேட் ஆப் பொட்டாஷ் 980 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 363 மெ.டென், காம்ப்ளக்ஸ் 2,930 மெ.டன் என்ற அளவிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

namakkal

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2022-23ஆம் ஆண்டிற்கு இதுநாள் வரை உளுந்து, பருத்தி, பச்சை பயறு, நிலக்கடலை, வெங்காயம், சோளம், மக்காச்சோளம், நெல் மற்றும் மரவள்ளி முதலிய பயிர்களுக்கு 3,448 விவசாயிகள் 1,370 எக்டேர் பரப்பளவிற்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மேலும், விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் / தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய காலத்திற்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு 50 சதவீதம் மானியத்தில் (ரூ.3,500 /  மெ.டன்) விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப 5 மெ.டன் (ரூ.17,500) முதல் 25 மெ.டன் (ரூ.87,500) வரை அமைத்து தரப்படும். 2022-23ஆம் ஆண்டில் இதுநாள் வரை பரமத்தி வேலுர் ஓழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய் 385 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு 86 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங்கிடம் வழங்கினர். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜகோபால், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செல்வகுமரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.