கல்வராயன் மலை பகுதிகளில் 3,400 லி. கள்ளச்சாராய ஊரல்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

 
illicit arrack

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய மதுவிலக்கு சோதனையில் 3,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்கும் விதமாக,  மாவட்ட எஸ்.பி. பகலவன் நேரடி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 சிறப்பு படைகள் அமைத்து மலை முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரல்களை அழிப்பது, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கைது செய்வது போன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, நேற்று காவல் ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், மூர்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கல்வராயன் மலை முழுவதும் அதிகாலை முதல் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையின்போது வாழப்பாடி, ஓடைப்பாடி, தாழ்வாழப்பாடி, மேற்கு ஓடை மற்றும் கன்னிமாத்து ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுமார் 17 சின்டக்ஸ் டேங்குகளில் இருந்த சுமார் 3,400 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே தரையில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், கள்ளச்சாராய காய்ச்சியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

illicit arrack

இதேபோல், சின்னசேலம் அடுத்த அமையாகரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் விற்பனை செய்த அமையாகரத்தை சேர்ந்த பச்சமுத்து(38) என்பவரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து 7 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், கச்சிராயபாளையம் காவல் நிலைய பகுதியில் சாராயம் விற்ற  கரடி சித்தூரை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன்(29) மற்றும்  பரங்கிநத்தம் பகுதியை சேர்ந்த தங்கராஜ்(62), ஆகியோரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சங்கராபுரம் காவல் நிலைய பகுதியில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த மோட்டாம்பட்டியை சேர்ந்த கார்த்திக் (42),  விஜயகாந்த்(30) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, 5 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.  

இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட எஸ்பி பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.