31-வது மெகா தடுப்பூசி முகாம்; சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 95,401 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது!

 
vaccine

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 31-வது மெகா தடுப்பூசி முகாமில், அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 95,401 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக ஆட்சியர் கார்மேகம் தெரித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற 31-வது மெகா தடுப்பூசி முகாமில் 12,211 நபர்களுக்கு முதல் தவணையும், 78,195 நபர்களுக்கு 2ஆம் தவணையும், 4,995 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணையும் என தமிழகத்திலேயே அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 95,401 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன.

collector

சேலம் மாவட்டத்தில் இதுவரை 12 வயது முதல் 14 வயது வரை உள்ள 89,690 நபர்களுக்கு முதல் தவணையும், 60,832 நபர்களுக்கு 2ஆம் தவணையும், 15 வயது முதல் 18 வயது வரை உள்ள 1,36,049 நபர்களுக்கு முதல் தவணையும்,1,10,495 நபர்களுக்கு 2ஆம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு இதுவரை 58,125 நபர்களுக்கு, முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.சேலம் மாவட்டத்தில் மொத்தம் 28,99,269 (95.5%) நபர்களுக்கு முதல் தவணையும், 25,28,720 (83.3%) நபர்களுக்கு 2ஆம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தற்போது கோவிஷீல்டு 1,18,900 டோஸ்களும், கோவேக்சின் 60,110 டோஸ்களும், கார்பேவாக்ஸ் 22,010 டோஸ்களும் என மொத்தம் 2,01,020 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இதற்கென ஒருமுறை  மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசி குழல்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு, ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.