திண்டுக்கல் அருகே உதவி பேராசிரியர் வீட்டில் 31 பவுன் நகை கொள்ளை!

 
robbery

திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலை. உதவி பேராசியர் வீட்டில் 31 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலை.யில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் ராஜாகண்ணு (36). இவரது மனைவி சியாமளாதேவி. இவர்கள் ராஜிவ்காந்தி நகரில் வசித்து வந்தனர். சமீபத்தில் சியாமளா தேவிக்கு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவர் மதுரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் ராஜாகண்ணு நாள்தோறும் பணி முடிந்து மதுரைக்கு சென்றுவிட்டு மறுநாள் காலையில் பணிக்கு வந்துள்ளார்.

dindigul

நேற்று மாலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு மதுரைக்கு சென்ற அவர், இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாகண்ணு, வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 31 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் அம்பாத்துரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்பாத்துரை போலீசார், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.