திண்டுக்கல் வழியாக ரயிலில் கடத்திய 31 கிலோ குட்கா பறிமுதல் - நெல்லை இளைஞர் கைது!

 
gutka

திண்டுக்கல் வழியாக பெங்களுரு எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திச்சென்ற 31 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர். 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் பெங்களுரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது. அந்த ரயிலில் ரயில்வே உதவி ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன், ராஜேஸ்குமார் ஆகியோர் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயிலில் சந்தேகத்திற்கு உரிய விதமாக இருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் பின் முரணமாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த ரயில்வே போலீசார், அவரது உடமைகளை பிரித்து சோதனையிட்டனர். 

dindigul

அப்போது, அவரது பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்திச்சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 31 கிலோ அளவிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அந்த நபரை திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் நெல்லை மாவட்டம் சுப்பையாபுரத்தை சேர்ந்த சேவியர்(30) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, சேவியர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.  தொடர்ந்து, அவரிடம் குட்கா கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.