சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை!

 
robbery

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பள்ளிப்படை வெற்றி நகரை சேர்ந்தவர் ஜாபர் அலி (56). சிங்கபூரில் பணிபுரிந்து வந்த இவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில், ஜாபர் அலியின் வீட்டில் இணையதள சேவை இல்லாததால், நேற்று சிதம்பரம் வடக்கு ரதவீதியில் உள்ள தனது மகள்  வீட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ளார். அங்கு பணி முடிந்து அதிகாலை 2 மணியளவில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது,  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஜாபர் அலி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார்.

chidambaram

அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜாபர் அலி, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திறகு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.