சாலையில் கிடந்த பாம்பால் விபரீதம்... லாரியிலிருந்து விழுந்த இரும்பு உருளை மீது பேருந்து மோதி 30 பேர் காயம்!

 
vilupuram accident

விழுப்புரம் அருகே லாரியில் இருந்து உருண்டு விழுந்த இரும்பு உருளையின் மீது அரசுப் பேருந்து மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுப்பிரமணி என்பவர், நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு பழைய இரும்புகளை ஏற்றிக்கொண்டு சென்றார். விழுப்புரம் மாவட்டம் பேரக்கியூர் என்ற இடத்தில் சென்றபோது திடீரென சாலையில் பாம்பு ஒன்று ஒடியுள்ளது. அப்போது, பாம்பின் மீது மோதல் இருப்பதற்காக அவர் திடீரென லாரியில் பிரேக் போட்டுள்ளார். இதில் லாரியில் இருந்த ராட்சத உருளை சாலையில் உருண்டு விழுந்தது.

vilupuram

அப்போது, பின்னால் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசுப்பேருந்து, அந்த உருளையின் மீது ஏறியதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ மீதும் பேருந்து மோதியது. இந்த விபத்தில்  ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். மேலும், பேருந்தில் பயணித்த 30-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக சென்னை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.