ஈரோட்டில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற 30 பேர் கைது ; 950 மதுபாட்டில்கள் பறிமுதல்!

 
liquor

ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தின்போது சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 30 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 950 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தையொட்டி, நேற்று முன்தினம் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக மாவட்ட எஸ்.பி சசிமோகன் உத்தரவின் பேரில், போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

arrest

அதன்படி, திங்களூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொன்னன் காட்டுப்புத்தூர் பகுதியில் சந்தேகத்திற்குரிய விதமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் இருசக்கர வானத்தில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 48 மதுபாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய தீவிர சோதனையில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த 30 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 950-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.