தூத்துக்குடி அருகே காரில் குட்கா கடத்திய 3 பேர் கைது... ரூ.90 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

 
tuti

தூத்துக்குடி அருகே காரில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சூரன்குடி பொறுப்பு காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையில், உதவி ஆய்வாளர் சந்தரம் மற்றும் போலீசார் நேற்று வேம்பார் பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்திச்செல்வது தெரியவந்தது.

tuti

இதனை அடுத்து, காரில் இருந்து ரூ.90 ஆயிரம் மதிப்பிலான 11,250 புகையிலை பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குட்காவை கடத்தியது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அப்துல் அலி(52), கேப்ரியல்(34) மற்றும் அஜ்மிர் காஜா(38) ஆகியோரை கைது செய்த போலீசார், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.