மைசூரில் இருந்து தமிழகத்திற்கு பேருந்தில் குட்கா கடத்திய 3 பேர் கைது... 23 கிலோ குட்கா பறிமுதல்!

 
arrest

மைசூரில் இருந்து சத்தியமங்கலத்திற்கு பேருந்தில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 23 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சலீம் தலைமையிலான போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுடிருந்தனர். அப்போது மைசூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி கர்நாடக அரசு பேருந்தை போலீசார் நிறுத்தி, பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனர். அப்போது, தேனி மாவட்டத்தை சுரேஷ் (38), தாமரைச்செல்வன் என்கிற அழகேசன்(29) ஆகியோர் கொண்டு வந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்திவந்தது தெரிய வந்தது.

இதன் மதிப்பு ரூ.8,736 ஆகும். இதனை அடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அழகேசன் மைசூரிலிருந்து குட்கா பொருட்களை வாங்கி தேனியில் விற்பனை செய்வதற்காக கடத்திச்சென்றதை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

gutka

இதேபோல், சத்தியமங்கலம் பண்ணாரி சோதனைச்சாவடியில் உதவி ஆய்வாளர் சலீம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, மைசூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த கர்நாடகா பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது, கோயம்புத்தூர் கருமாத்தம்பட்டியை சேர்ந்த ஜெகதீசன் (27) என்பவருக்கு சொந்தமான 2 பேக்குகளை போலீசார் திறந்து சோதனையிட்டனர். அப்போது, அதில் 11 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ஜெகதீசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மைசூலூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி கோவைக்கு விற்பனைக்கு கடத்திச்சென்று தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெகனதீசனை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 11 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.