ஈரோட்டில் இளைஞரிடம் செல்போன், பணம் பறிப்பு... சிறுவன் உள்பட 3 பேர் கைது!

 
cellphone snatch

ஈரோடு ராசாம்பாளையம் பகுதியில் சாலையில் நடந்த சென்ற இளைஞரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு கொங்கம்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மோகனசுந்தர் (25). இவர் சம்பவத்தன்று ஈரோடு ராசாம்பாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல், மோகனசுந்தரை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பியோடினர். இது குறித்து மோகனசுந்தர் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

arrest

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், வீரப்பன்சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் மனோஜ்குமார்(22), பாலசுப்பிரமணியம் (19), மட்டும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவன் என தெரிய வந்தது. மேலும், மோகனசுந்தரத்திடம் செல்போன் மற்றும் பணம் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, மனோஜ் குமார், பாலசுப்பிரமணியம் ஆகியோரை கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 18 வயதுக்குட்பட்ட சிறுவனை கோவையில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.