வள்ளியூர் பகுதியில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது: 22 பைக்குகள் பறிமுதல்!

 
nellai

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட மூவரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 22 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர், பணகுடி, பழவூர், ராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக, காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைதுசெய்ய நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன், வள்ளியூர் உட்கோட்ட டிஎஸ்பி யோகேஷ்குமாருக்கு அறிவுறுத்தினார். அதன் பேரில், வள்ளியூர் டிஎஸ்பி மேற்பார்வையில், வள்ளியூர் காவல் ஆய்வாளர் சாகுல்ஹமீது, குற்றப்பிரிவு ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ், காவலர்கள் சுரேஷ் மற்றும் லுர்து டேனியல் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

bike theft

அப்போது, வள்ளியூர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி புதூரை சேர்ந்த சுனில் (18), செல்வன்(32) மற்றும் கூத்தங்குழி மேலத்தெருவை சேர்ந்த ஜெபாஸ்டின்(23) ஆகியோர் என தெரியவந்தது. இதனை அடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.12 லட்சத்து 50 ஆயிரம்  மதிப்புள்ள 22 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட வாகனங்கள் வள்ளியூர், பழவூர், நெல்லை மாநகரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, கைதான 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.