வெளிநாட்டில் பணியின்போது இறந்த 10 பேரின் குடும்பங்களுக்கு ரூ.29.14 லட்சம் இழப்பீட்டு தொகை... ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்!

 
tvr

திருவாரூரில் இன்று ஆட்சியர் காயத்ரி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெளிநாட்டில் பணிபுரிந்தபோது உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு ரூ.29.14 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 250 மனுக்களை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, குறித்த காலத்திற்குள் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

tvr

இதனை தொடர்ந்து நடைபெற்ற  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிராமம் பெருகவாழ்ந்தான் பகுதியை சேர்ந்த உஷா என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்ததால் அவரது வாரிசுதாரருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வரப்பெற்ற ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். மேலும், அயல்நாட்டில் பணிபுரிந்து பணியின்போது உயிரிழந்தவர்களின்  வாரிசுதாரர்களான 10 நபர்களுக்கு ரூ.29,14,294 மதிப்பிலான இழப்பீட்டு தொகைக்கான காசோலையை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.