திமுக பிரமுகர் வீட்டில் பதுக்கிய 2,700 மதுபாட்டில்கள் பறிமுதல் - பெண் உள்பட இருவர் கைது!

 
liquor

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே திமுக பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,700 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள ஜெ.மெட்டூர் பகுதியை சேர்ந்தவர் காசிமாயன் (45). திமுக பிரமுகர். இவரது வீட்டில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து உள்ளதாக, மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று எஸ்பி தனிப்படை போலீசார், காசிமாயன் வீட்டில் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டில் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த 960 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

arrested

தொடர்ந்து, அவரது தோட்டத்தில் போலீசார் சோதனையிட்டபோது, அங்கு காசிமாயனின் மனைவி தீபா மற்றும் ஓட்டுநர் கதிர்வேல் ஆகியோர் ஆட்டோவில் பெட்டி பெட்டியாக மது பாட்டில்களை ஏற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் ஆட்டோவில் இருந்த 1,738 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இரு இடங்களில் இருந்து மொத்தம் 2,698 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பியோடிய காசிமாயனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது