வேலூர் அருகே துணிகரம்... இஎஸ்ஐ மருத்துவமனை ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

வேலூர் அருகே இஎஸ்ஐ மருத்துவமனை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாயூப் பானு. இவர் வேலூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் சாயூப் பானு, வீட்டை பூட்டிவிட்டு விரிஞ்சிபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சாயூப் பானுவின் வீட்டிற்கு வேலைக்கார பெண் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக சாயூப் பானுவிற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், அவர் விரைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மர்மநபர்கள் பீரோவை உடைத்து உள்ளே வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

bagayam

இது குறித்து சாயூப் பானு அளித்த புகாரின் அடிப்படையில் பாகாயம் போலீசார், கொள்ளை நடைபெற்ற வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் மூலம் கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இஎஸ்ஐ மருத்துவமளை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்  துத்திப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.