முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

தூத்துக்குடி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 22 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நீராவிமேட்டை சேர்ந்தவர் கனிராஜ். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாலதி. இவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது தம்பதியினர் இருவரும் சென்னையில் வசித்து வரும் நிலையில் அவ்வப்போது, சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று நீராவி மேட்டில் உள்ள கனிராஜின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து கனிராஜுக்கு செல்போனில் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கனிராஜ். இது குறித்து புதியம்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.  

tuticorin

அதன் பேரில் போலீசார் கொள்ளை நடைபெற்ற வீட்டிற்கு நேரில் சென்று சோதனையிட்டனர். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 22 பவுன் நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து கனிராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.