திண்டுக்கல் அருகே மளிகைக்கடையில் 22 கிலோ குட்கா, வெடிபொருட்கள் பறிமுதல்; கடை உரிமையாளர் கைது!

 
dgl

திண்டுக்கல் அருகே மளிகைக்கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 22 கிலோ குட்கா பொருட்கள், 64 வெடி பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவத்தூர் பகுதியில் உள்ள மளிகைக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட எஸ்.பி சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில்,  எஸ்.பி. தனிப்படை போலீசார் நேற்று சிலுவத்தூர் பகுதியில் உள்ள சுந்தரம் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடையில் தீடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடையில் குட்கா புகையிலை பொருட்கள், வெடி பொருட்கள் ஆகியவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

dgl

இதனை அடுத்து, கடையில் இருந்து 22 கிலோ குட்கா பொருட்கள், 50 பாக்கெட் சனல் சுற்றப்பட்ட வெடி பொருள்கள் மற்றும் 14 காகிதம் சுற்றப்பட்ட வெடிபொருள்கள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, மளிகை கடை உரிமையாளர் சுந்தரத்தை கைது செய்து, சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு சுந்தரம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்கா மற்றும் வெடி பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாருக்கு, மாவட்ட எஸ்.பி சீனிவாசன் நேரில் பாராட்டு தெரிவித்து, வெகுமதி வழங்கினார்.