பெங்களூரில் இருந்து சரக்கு லாரியில் கடத்திய 21,000 லி. எரிசாராயம் பறிமுதல் - ஒருவர் கைது!

 
liquor sized

ஊத்தங்கரை அருகே பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு சரக்கு லாரியில் கடத்திச்சென்ற 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக புதுச்சேரிக்கு பல ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கடத்தப்படுவதாக, மத்திய புலனாய்வு பிரிவு எஸ்.பி சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு ஆய்வாளர் புயல் பாலசந்திரன் தலைமையிலான போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி என்ற பகுதியில் சந்தேகத்திற்குரிய விதமாக சென்ற சரக்கு லாரியை மறித்து சோதனை மேற்கொண்டனர். 

arrest

அப்போது, லாரிகளில் பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கேன்களில் எரிசாராயம் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுமார் 35 லிட்டர் அளவுடைய 600 கேன்களில் இருந்த 21 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த  ஓட்டுநர் பாலேந்திர சிங் என்பவரை கைது செய்தனர். 

தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் ஓசூர் கலால் பிரிவு டிஎஸ்பி சிவலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு எரிசாராயம் கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மாவட்டங்கள்