திருமங்கலத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 21 பவுன் நகை கொள்ளை!

 
mdu

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம்  ஜவகர் நகர் 12-வது தெருவில் வசிப்பவர் மணிமேகலை. ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை. கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், மணிமேகலை தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமேகலை குடும்பத்துடன் வெளியூர் புறப்பட்டு சென்றிருந்தார்.நேற்று காலை வீட்டு வேலை செய்யும் பெண் சென்றபோது, மணிமேகலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து மணிமேகலைக்கு தகவல் அளித்தார்.

tirumangalam

அதன் பேரில், மணிமேகலை திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 21 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.  தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.