பெரியகுளம் மீன்மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த 200 கிலோ மீன்கள் பறிமுதல்!

 
periyakulam

தேனி மாவட்டம் பெரியகுளம் மீன்மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 200 கிலோ பார்மாலின் ரசாயனம் தடவிய மீனை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மீன் மார்க்கெட் பகுதியில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை அடுத்து, பெரியகுளம் மீன் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஸ்வரன் தலைமையில், மீன்வளத்துறை அதிகாரிகள், பெரியகுளம் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

theni

அப்போது, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை மீன் வளத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில், மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பார்மாலின் ரசாயனம் தடவி விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அங்கிருந்த கடைகளில் வெளி மாவட்டங்களுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 200 கிலோ ரசாயனம் தடவிய மீன்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.