நெல்லையில் துணிகரம்... ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை!

 
robbery

நெல்லையில் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லை அருகேயுள்ள பேட்டை காந்தி நகரில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற வட்டாட்சியர் சுப்பிரமணியன் (60). இவர் கடந்த 15ஆம் தேதி வடமாநிலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றிருந்தார். பின்னர் இன்று காலை அனைவரும் நெல்லைக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன், வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, மர்மநபர்கள் அவரது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, உள்ளே வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர், பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

nellai

அதன் பேரில், போலீசார் சுப்பிரமணியன் வீட்டிற்கு நேரில் சென்று கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற வட்டாட்சியர் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.