விருதுநகர் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய 20 பேர் கைது - வனத்துறையினர் நடவடிக்கை!

 
vnr

விருதுநகர் அருகே குலதெய்வ வழிபாட்டிற்காக வனவிலங்குகளை வேட்டையாடிய நத்தம் பகுதியை சேர்ந்த 20 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வேட்டையாடிய விலங்குகள், 3 கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

விருதுநகர் அருகே சட்டவிரோதமாக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையிருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், வனத்துறையினர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 3 கார்களை மறித்து வனத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, காரில் ஏராளமான காட்ட முயல்கள், கீரிப்பிள்ளைகள், கௌதாரிகள் மற்றும் அணில்களை வேட்டையாடி எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, 29 முயல்கள் உள்ளிட்ட வேட்டையாடிய வனவிலங்குகளையும், கார்களையும் பறிமுதல் செய்த வனத்துறையினர் இது தொடர்பாக கார்களில் வந்தவர்களை விருதுநகர் உதவி வன பாதுகாப்பு அலுவலகம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

arrest

அப்போது, அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்த கருத்தலக்கம்பட்டி, புதூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பாரிவேட்டை எனப்படும் குல தெய்வ வழிபாட்டிற்காக விருதுநகர் மாவட்டம் பூசாரிப்பட்டி வனப்பகுதியில் வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனை அடுத்து, இரு கிராமங்களை சேர்ந்த 20 பேரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து வேட்டைக்கு பயன்படுத்திய நாய்கள், கம்பு மற்றும் கவன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.