விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 2 இளைஞர்கள்... 2-வது நாளாக தேடுதல் பணி தீவிரம்!

 
vlpm

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட 2 இளைஞர்களை தேடும் பணி 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ் (30) மற்றும் செந்தல் (30).  நண்பர்களான இருவரும் நேற்று மாலை பிடாகம் பகுதியில் உள்ள தென் பெண்ணை ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், உடனடியாக அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவாகியும் இருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து, நேற்றிரவு தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

vpm

இதனிடையே, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் மீட்பதில் தீயணைப்புத்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக கூறி, பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டக்காரர்களிம், இளைஞர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  

இதனை தொடர்ந்து, இன்று 2-வது நாளாக தென் பெண்ணை ஆற்றில் மாயமான இருவரையும் தீயணைப்புத்துறையினர் போட் மூலம் தேடி வருகின்றனர். தேடுதல் பணியினை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த ஆய்வின்போது விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, எம்எல்ஏக்கள் புகழேந்தி, இலட்சுமணன், மணிக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.