தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட 2 பெண்கள் பலி!

 
drowned

தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் குளத்தில் மூழ்கி 12 வயது சிறுமி உள்பட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை நயினார்புரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். தொழிலாளி. இவரது மனைவி சண்முகதாய். இத்தம்பதிக்கு சுடலைக்கனி உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன் சண்முகத்தாய் உடல்நல குறைவால் இறந்துவிட்டார். அவரது 16-வது நாள் காரியம் நேற்று வீட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெளியூரில் இருந்த வந்த உறவினர்களும் கலந்து கொண்டனர்.

dead body

தொடர்ந்து, சுடலைக்கனி, தனது உறவினரான ஆறுமுகனேரியை சேர்ந்த 12 வயது சிறுமி கோகிலா உள்ளிட்டோருடன் அங்குள்ள பெரிய குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். குளத்தில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமி கோகிலா சகதியில் சிக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுடலைக்கனி, அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத இருவரும் சகதியில் சிக்கி மூழ்கினர். இதனை கண்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தில் இறங்கி தேடினர்.

அப்போது, சுடலைக்கனி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு வீரர்கள், குளத்தில் இருந்து சிறுமி கோகிலாவின் உடலை மீட்டனர். தொடர்ந்து, ஏரல் போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.