மேட்டுப்பாளையம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதல் - முதியவர் பலி!

 
mettupalayam

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக அன்னுர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அவர் மீது அதிவேகமாக மோதியது. இதில் வாகனத்தில் இருந்து துக்கி வீசப்பட்ட பழனிசாமி பலத்த காயமடைந்தார்.

mettupalayam

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை போலீசார், அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பழனிசாமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.