தஞ்சையில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்ட 2 தனியார் பேருந்துகள் பறிமுதல்!

 
thanjavur

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக நடந்துகொண்ட 2 தனியார் பேருந்துகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று மதியம் தஞ்சைக்கு புறப்பட இருந்த 2 தனியார் பேருந்து ஒட்டுநர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேருந்து ஓட்டுநர்களும் போட்டி போட்டுக்கொண்டு பேருந்தை முந்தி சென்றுள்ளனர். தொடர்ந்து, தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிய பின்னர், இரு ஓட்டுநர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஒருவர் தனது பேருந்தை அதிவேகமாக பின்னோக்கி நகர்த்தி, நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தின் மீது மோதினார். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து சேதடைந்தது. இந்த சம்பவம் குறித்து வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

thanjavur

இதனால் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த நிலையில், இந்த விவகாரம் அறிந்த தஞ்சை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த் தலைமையிலான அதிகாரிகள், புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 தனியார் பேருந்துகளையும் பறிமுதல் செய்து, தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். தொடர்நது, பறிமுதல் செய்யப்பட்ட பேருந்துகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.